உச்சிவெயில்

Sunday, August 31, 2014

மொறட்டுவ பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் "ஒவ்வொரு துளிப்பொழுதும் உயிர்ப்புடன் கரைகிறது" என்ற தலைப்பில் நடாத்தப்பட்ட கவியரங்கத்தில் உச்சிவெயில் என்ற உபதலைப்பில் நான் எழுதிய கவிதை...


இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய
இளமை வருவதற்குள்
முந்தி வந்தாள் மூதாட்டி
கொட்டிக்கிழங்கோஓஓஓஓஓஓ... கிழங்கு!
கொட்டிக்கிழங்கோஓஓஓஓஓஓ.. கிழங்கு!


காட்சி - 1: சுட்ட கதை


உச்சிவெயில் தகித்த பெருநிலத்தில்
மழையும் பொய்த்து முப்போகம் பொய்த்து
அரைவயிறும் கால் வயிறுமாய் கிடந்த வீடுகள்
வெறிச்சென்றிருந்தன வளவுகள்
தகரக்கொட்டில் வீடுகள் தள்ளி நிற்கும் மரநிழலில்
உயிரின் சுவடுகள்
பெரிதும் சிறிதும் உஸ்ஸென்றபடி
படலைமேல் தலை நீட்டிய கிழவிக்கு
மரநிழலில் இடந்தந்தனர் உயிராற.


அண்ணாந்து பார்த்தாள்.
சிற்றிலைகள் தாண்டி ஊடறுக்கும் சூரியன்
பட்டுக்கொண்டிருந்த மரத்தின் கீழ்
சுட்ட பழக் கதைகள் எழவில்லை.
சுட்ட பழையகதைகள் எழவில்லை
பழங்கதைகள் பேசி என்ன பயன்
உலகெங்கும்
இருப்பின் அடையாளமிழந்து
மண்பெயர்ந்து ஏகுகிறார் மக்கள்
அது போல் ஆதல் கூடும்

அதற்காய் சரித்திரத்தை உந்தும் விசைகள் ஓய்ந்து போகுமா என்ன..?
மணலுள் புதைந்த தேர் இழுத்த தடமென உருள்கின்றது வாழ்க்கைப் பயணம்

காட்சி - 2 : வெளிகள்


உச்சிவெயில் தகித்து எரிந்த தேசத்தில்
சோளகம் வீசியது,
வெயில் மொண்டு குடித்துவிட்டு
பட்டம் விட சென்ற சிறுவர்கள்
வெளியில் காணாமல் போயினர்
எங்குற்றார்? ஏதானார்?


கிளித்தட்டு பெட்டிகளிலில்லை
மாமரத்தோப்புகளில் இல்லை
வண்ணத்துப்பூச்சி வெளிகளிலுமில்லை
அவர்கள் ஓடும் ரயிலுக்கு கைகாட்ட வரவுமில்லை


புழுதியில் தோய்ந்த மேனியுடனும்
நாயுருவி கிழித்த கால்களுடனும்
தேக்கங்கொட்டை உடைத்து எறிந்த தடங்களில்
அவர்களை நீங்கள் யாரேனும் கணடிருந்தால் கூறுங்கள்...


பாட்டி மடியில் நேற்று வரை இருந்து
நிலாச்சோறு உண்டவர்கள் மறைந்து
போவார்களென யாரும் நினைத்தில்லை


பேய் உறையும் காட்டுவெளிகளில்
கரைந்த யதார்த்தங்களில்
ஈர்த்த செய்திகளில் அவர்கள் இல்லை
காணாமல் போனவர்
கரைந்தே போயினர்.....

காணாமல் போனவர் கதைகளுடன்
மெல்ல மெல்ல நகர்கிறது பகல்


காட்சி - 3 : மாநகரம்

காங்கிரிட் காடுகளின் இரைச்சலில்
அனல் மூச்செறியும் சனநெரிசலில்
ஊர்வலத்தில் நிற்கிறாள் மூதாட்டி
சுட்டெரிக்கும் வெயிலில்
காணாமல் போனவனின் நிழற்படத்துடன்


உடலெங்கும் சாவின் வெழுப்பு
பேசாமற்போகும் பல்லாயிரம் மனிதரில்
யாராவது கூர்ந்து நோக்கி
இந்தா உன் மகன் என்று தரமாட்டானா என்ற தளரா ஆசையுடன்

வேர்கொண்டெழுந்த வாழ்வு
வேறுவேறாய் பெயர இருப்பிழந்து
போன ஆலமரமொன்றின்
கதை அவள் கதை


காட்சி - 4 : இழவு


உச்சி வெயில் கொழுத்துகிறது
கொப்புளித்த குருதி திட்டுத் திட்டாய்
சிதறிக் கிடக்க
வட்டில் சுமந்து அடி முந்தி வந்த ஓர் இளம் பெண்
சேற்றுக் நடுவில் தாமரையாய்
வெள்ளை திரைச்சீலைகளால் போர்தப்பட்டு
அசைவற்று கிடக்கிறாள்

இறுதிக் கணங்களில் எந்தக் குரலை விளித்திருப்பாள்
உயிர் கரையும் வேளையிலே யாரைத்தான் நொந்திருப்பாள்


பொற்சுண்ணம் இடிக்கவில்லை
வாய்க்கரிசி போடவில்லை
கொள்ளி வைக்கவும் யாருமில்லை

மரணத்தைதான் எதிர்நோக்குகிறோம்
என்றறியாத பாலகனின்
அப்பாவித்தனம் போல
எங்கும் சமமாய் பொழிகிறது வெயில்

எனினும் கூட
ஒவ்வோர் துளிப்பொழுதும் உயிரோடு
உயிர்ப்போடு கரைகிறது...