மகிமைப்படுத்தல்

Thursday, November 28, 2013

ஆங்காங்கே இருண்டமூலைகளில்
மக்கள் சந்தித்துக் கொள்கிறார்கள்

தமக்கே கேட்காத குரல்களில்
ஏதேதோ சலசலக்கிறார்கள்

கீற மடித்த காகிதத் தாளை
கொடியாயும்,
பொத்திய உள்ளங்கையுள்
ஏற்றிய சுடருடன்
மௌன அஞ்சலி புரிகிறார்கள்.

கூட்டத்தில் வந்திணையும் 
ஒவ்வொருவரும் 
வருகை பற்றியும்,
பெருவெற்றி பற்றியும்,
எதிர்வு கூறுகிறார்கள்..

இரைச்சலாய் கேட்ட வண்ணம்...
ஆங்காங்கே மனித மனங்களின்
இருண்ட மூலைகளில்
ஓர் எண்ணம் குடிகொள்ள...
ஆங்காங்கே இருண்டமூலைகளில்
மக்கள் சந்தித்துக் கொள்கிறார்கள்


முடிந்தவரை

Thursday, October 24, 2013

முடிந்தவரை ஒரு 
கடினமான பாதையை
பிரார்த்திக்கிறேன்...

வழிநெடுகேமுட்களும்
சர்ப்பங்களும் 
நிறைந்திருக்க வேண்டும்

பாதைவழியே
தவறியேனும் பூக்கள்
விழாதிருக்க வேண்டும்

சீழிலிருந்து வடியும் 
குருதிவழியே 
சிறுகச் சிறுக - என்
உயிரும் வடிந்து
போக வேண்டும்

வெற்றியின் 
மெய் ருசி அறிந்திட
முடிந்தவரை ஒரு 
கடினமான பாதையை
பிரார்த்திக்கிறேன்..

தெய்வ தரிசனம்

Wednesday, September 4, 2013

தங்கம் வேய்ந்த
தெருக்களின் வழியே
அத்தேர் நகர்கிறது

நானோ,
மூத்திர சந்துகளிலும்
முட்டு இடுக்குகளிலும் ஒதுங்கி

தேர் அதன் தரிசனம் கண்டுவிட
கக்த்தின் இடுக்கில் மடக்கிய
கந்தைத் துணியும் கொண்டு
ஏக்கத்துடன் அங்கலாய்க்கிறேன்,

ஐயா,
திரும்பத் திரும்ப வந்து பார்க்கிறேன்
உன் தரிசனம் கிடைக்கவில்லை
கொட்டிக் கொட்டித் தீர்த்தபின்னும்
எந்த விலைக்கும் நீ அகப்படவில்லை

பிரபஞ்சம்

Saturday, March 30, 2013

பருப்பொருள் அதன் எதிர்ப்பொருள்
சேர்க்கையாய் வெறுமையில்
இருத்தல் இல்லாமலிருத்தல்
இரண்டுமாய் நிலைகளில்
ஒரு மாயப்பொருள்

ஓர் சொல்லிற்கு முன்னும் பின்னும்
மிதந்து கொண்டிருக்கும் மௌனமிது

எல்லையற்ற இந் நாதப்பெருவெளியில்
'நான்' என்பது ஓர் சொல்தான்
நன்மையென தீமையென
நிலையொன்றில்லை
உன்னதமென்றும் புனிதமென்றும்
ஏதுமேயில்லை

பிரபஞ்ச சத்தியமொன்றுதான்
அதை பலதாக்குவது நம் அனுபவமே
திசைகளற்ற இவ்வெளியில்
எத்திசையும் முன்னோக்கியதுதான்

கரைந்து போன சிறுவர்கள்

Monday, March 4, 2013

ஆடிக்களிக்கவென விரிந்திரிந்த
ஆலமர ஊஞ்சலருகே
விளையாடித்திரிந்த
சிறுவர் காணாமல் போனார்.
எங்குற்றார்? ஏதானார்?

கிளித்தட்டு பெட்டிகளிலில்லை
மாமரத்தோப்புகளில் இல்லை
வண்ணத்துப்பூச்சி வெளிகளிலுமில்லை
அவர்கள்
ஓடும் ரயிலுக்கு கைகாட்ட வரவுமில்லை

பாட்டி மடியில் நேற்று வரை இருந்தவர்கள்
நிலாச்சோறு உண்டவர்கள்
மறைந்து போவார்களென
யாரும்  நினைத்தில்லை

தசாப்தங்கள் கடந்தும் தேடியலையும் பெற்றோர்
காலங்கள் கழிந்த பின்னும்
பேய் உறையும் காட்டுவெளிகளில்
கரைந்த யதார்த்தங்களில்
ஈர்த்த செய்திகளில்
அவர்கள் இல்லை
காணாமல் போனவர் கரைந்தே போயினர்