மருள்நோக்கு

Saturday, October 4, 2014

அடைக்கப்பட்ட ஓர் அறையினுள்
ஓர் நபராய்
எங்களை நாங்களே
கண்ட கனவுகள் தாம்
நம் நிஜங்கள்,

எல்லாக் கனவுகளைப் போல
மருள் நோக்கில் நகர்கிற
இந்த கனவின் முடிவிலும்
அகண்ட அந்தகாரத்தில்
நிறைவேறா
உணர்ச்சிகளின் தூண்டலில்
உயிர் கொண்டு
ஓர் மிருகம் காத்திருக்கும்

அர்த்தமற்று ஆயிரம் சிந்தனைகள்
ஆலாப் பறக்கையிலே
வௌியே
வாசல் கடந்து மழைபெய்யும்,
கலைந்த கூட்டினின்று,
ஈசல்கள் ஔி தேடி பறந்து வரும்,
பெரும் தீயில் அவை மடிந்து போகும்,
போய்மடிந்த ஈசல் கூட்டங்களை
தேடுவதில் தான்
நம் மயக்கங்கள்

உச்சிவெயில்

Sunday, August 31, 2014

மொறட்டுவ பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் "ஒவ்வொரு துளிப்பொழுதும் உயிர்ப்புடன் கரைகிறது" என்ற தலைப்பில் நடாத்தப்பட்ட கவியரங்கத்தில் உச்சிவெயில் என்ற உபதலைப்பில் நான் எழுதிய கவிதை...


இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய
இளமை வருவதற்குள்
முந்தி வந்தாள் மூதாட்டி
கொட்டிக்கிழங்கோஓஓஓஓஓஓ... கிழங்கு!
கொட்டிக்கிழங்கோஓஓஓஓஓஓ.. கிழங்கு!


காட்சி - 1: சுட்ட கதை


உச்சிவெயில் தகித்த பெருநிலத்தில்
மழையும் பொய்த்து முப்போகம் பொய்த்து
அரைவயிறும் கால் வயிறுமாய் கிடந்த வீடுகள்
வெறிச்சென்றிருந்தன வளவுகள்
தகரக்கொட்டில் வீடுகள் தள்ளி நிற்கும் மரநிழலில்
உயிரின் சுவடுகள்
பெரிதும் சிறிதும் உஸ்ஸென்றபடி
படலைமேல் தலை நீட்டிய கிழவிக்கு
மரநிழலில் இடந்தந்தனர் உயிராற.


அண்ணாந்து பார்த்தாள்.
சிற்றிலைகள் தாண்டி ஊடறுக்கும் சூரியன்
பட்டுக்கொண்டிருந்த மரத்தின் கீழ்
சுட்ட பழக் கதைகள் எழவில்லை.
சுட்ட பழையகதைகள் எழவில்லை
பழங்கதைகள் பேசி என்ன பயன்
உலகெங்கும்
இருப்பின் அடையாளமிழந்து
மண்பெயர்ந்து ஏகுகிறார் மக்கள்
அது போல் ஆதல் கூடும்

அதற்காய் சரித்திரத்தை உந்தும் விசைகள் ஓய்ந்து போகுமா என்ன..?
மணலுள் புதைந்த தேர் இழுத்த தடமென உருள்கின்றது வாழ்க்கைப் பயணம்

காட்சி - 2 : வெளிகள்


உச்சிவெயில் தகித்து எரிந்த தேசத்தில்
சோளகம் வீசியது,
வெயில் மொண்டு குடித்துவிட்டு
பட்டம் விட சென்ற சிறுவர்கள்
வெளியில் காணாமல் போயினர்
எங்குற்றார்? ஏதானார்?


கிளித்தட்டு பெட்டிகளிலில்லை
மாமரத்தோப்புகளில் இல்லை
வண்ணத்துப்பூச்சி வெளிகளிலுமில்லை
அவர்கள் ஓடும் ரயிலுக்கு கைகாட்ட வரவுமில்லை


புழுதியில் தோய்ந்த மேனியுடனும்
நாயுருவி கிழித்த கால்களுடனும்
தேக்கங்கொட்டை உடைத்து எறிந்த தடங்களில்
அவர்களை நீங்கள் யாரேனும் கணடிருந்தால் கூறுங்கள்...


பாட்டி மடியில் நேற்று வரை இருந்து
நிலாச்சோறு உண்டவர்கள் மறைந்து
போவார்களென யாரும் நினைத்தில்லை


பேய் உறையும் காட்டுவெளிகளில்
கரைந்த யதார்த்தங்களில்
ஈர்த்த செய்திகளில் அவர்கள் இல்லை
காணாமல் போனவர்
கரைந்தே போயினர்.....

காணாமல் போனவர் கதைகளுடன்
மெல்ல மெல்ல நகர்கிறது பகல்


காட்சி - 3 : மாநகரம்

காங்கிரிட் காடுகளின் இரைச்சலில்
அனல் மூச்செறியும் சனநெரிசலில்
ஊர்வலத்தில் நிற்கிறாள் மூதாட்டி
சுட்டெரிக்கும் வெயிலில்
காணாமல் போனவனின் நிழற்படத்துடன்


உடலெங்கும் சாவின் வெழுப்பு
பேசாமற்போகும் பல்லாயிரம் மனிதரில்
யாராவது கூர்ந்து நோக்கி
இந்தா உன் மகன் என்று தரமாட்டானா என்ற தளரா ஆசையுடன்

வேர்கொண்டெழுந்த வாழ்வு
வேறுவேறாய் பெயர இருப்பிழந்து
போன ஆலமரமொன்றின்
கதை அவள் கதை


காட்சி - 4 : இழவு


உச்சி வெயில் கொழுத்துகிறது
கொப்புளித்த குருதி திட்டுத் திட்டாய்
சிதறிக் கிடக்க
வட்டில் சுமந்து அடி முந்தி வந்த ஓர் இளம் பெண்
சேற்றுக் நடுவில் தாமரையாய்
வெள்ளை திரைச்சீலைகளால் போர்தப்பட்டு
அசைவற்று கிடக்கிறாள்

இறுதிக் கணங்களில் எந்தக் குரலை விளித்திருப்பாள்
உயிர் கரையும் வேளையிலே யாரைத்தான் நொந்திருப்பாள்


பொற்சுண்ணம் இடிக்கவில்லை
வாய்க்கரிசி போடவில்லை
கொள்ளி வைக்கவும் யாருமில்லை

மரணத்தைதான் எதிர்நோக்குகிறோம்
என்றறியாத பாலகனின்
அப்பாவித்தனம் போல
எங்கும் சமமாய் பொழிகிறது வெயில்

எனினும் கூட
ஒவ்வோர் துளிப்பொழுதும் உயிரோடு
உயிர்ப்போடு கரைகிறது...

ஜன்னல்களற்ற வீடு

Saturday, July 5, 2014

ஜன்னல்களற்ற வீட்டினின்று
இரகசியங்கள் கசிவதில்லை,
ஜன்னல்களற்ற வீட்டின் மனிதர்களை
யாரும் கண்டதில்லை,
வழிப்போக்கர்களால் அவர்கள்
தேவர்களாகவோ அன்றி அசுரர்களாகவோ
உருவகிப்படுவர்.

ஜன்னல்களற்ற வீட்டினுள் மரணம் 
நிகழ்வதில்லை 
அங்கே கூக்குரல்களோ,
சிரிப்பொலிகளோ,
எழுவதில்லை

ஜன்னகளற்ற வீட்டில் தான் உலகை
புரட்டிடும் விந்தைகள் நடக்கிறது,
அங்கேதான் அந்த விந்தை அழிவிற்கு
வித்திடுகிறது

ஜன்னல்களற்ற வீட்டில் 
சுதந்திர குருவிகள் இசைப்பதில்லை,
வெறுமையின் இராகமொன்றே
ஒலிக்கிறது

ஜன்னல்களறற் வீட்டில் 
சண்டைகள் இல்லை,
புணர்ச்சிக்ள இல்லை,
உணர்ச்சிகள் இல்லை,
அங்கே மொழி கண்டு யாரும்
குழைவதில்லை

ஜன்னல்களற்ற வீட்டில்தான்
உணர்ச்சியற்ற கவிதைகள் பிரசவிக்கிறது

அழகிகள் தொலைவதில்லை

Sunday, June 29, 2014

பேரூந்து தரிப்புகளில்
பெருங்கூட்டங்களில்
சாலையோர இருக்கைகளில்
அழகிகள் தொலைந்து போகிறார்கள்

அவர்களை
அங்கலாய்த்து தேடி
கண்கள் ஓய்ந்து போகின்றது

சாலைத் திருப்பங்களில்
கண்திரும்பும் வேளைகளில்
கண்மூடிய கனவுகளில்
மீண்டும் வருகிறார்கள்

நண்பா,
அழகிகள் தொலைவதில்லை.

மொழித் தளை

Wednesday, June 18, 2014

எதையும் புரியாமல்
இதயம் பரிவுறும்
கணங்களில் - என் கவலையெல்லாம்
மொழி பெயர் சூட்டி
கொச்சைப்படுத்திவிடுமென்பதுதான்

உன்னத தருணங்களில் 
மொழியோர் சுமை

தொலைதுார பயணங்களின்
புலர்பொழுதுளின் துடிப்பை,
ஆள் அரவமற்ற பொழுதுகளில்
காதல் தோல்வியின் வன்மத்தை,
சீதளக் காற்றில் உடலிடையே
அழுந்திய கைகளில் வெம்மையை,
விளம்பிட மொழியில்
தட்டுப்பாடுகள்தான் எத்தனை...

மொழிபெயர்ப்பில் சிதையும்
கவிதைகள் போல
வார்த்தைகளில் உணர்வுகள்
சிதைந்து போகிறது

மொழி வெறும் கோடுகளும்
வளைவுகளின் சேர்க்கை,
இரு மனங்களிற்கு இடைப்பட்ட
மொழியினின்றே ஆரம்பிக்கிறது

இனி,
காதலில், கண்ணீரில், 
புரிதலில், பிரிதலில் 
உள்ளங்கள் பேசிக்கொள்ளட்டும்.

ஓர் கவிதை

Tuesday, January 14, 2014

ஒரு கவிதையை என்னுள்
காதலித்துக் கொண்டேன்,
ஆரம்பமும் முடிவும்,
இடையில் நடப்பவையும்,
ஆங்காங்கே சொற்களாய்
எண்ணங்களாய்
என்னுள் முகிழ்ந்து சரமாகி
புவனம் முழுதும் 
மலர்க்காடாய் தெரியும்

சலனம் கொண்டு விழித்துக்கொள்ள
எல்லாம் கனவாய் மறந்துபோகும்,
திருவிழாவில் தொலைத்த தாயை 
தேடும் மழலைபோல் - என் மனம்
அக்கவிதை தேடி அலையும்

ஓர் தன்னிலை மயக்கமாய்
சுயானுபூதியாய்
அக் கவிதை இன்னும்
என்னோடு இருக்கும்...

மகிமைப்படுத்தல்

Thursday, November 28, 2013

ஆங்காங்கே இருண்டமூலைகளில்
மக்கள் சந்தித்துக் கொள்கிறார்கள்

தமக்கே கேட்காத குரல்களில்
ஏதேதோ சலசலக்கிறார்கள்

கீற மடித்த காகிதத் தாளை
கொடியாயும்,
பொத்திய உள்ளங்கையுள்
ஏற்றிய சுடருடன்
மௌன அஞ்சலி புரிகிறார்கள்.

கூட்டத்தில் வந்திணையும் 
ஒவ்வொருவரும் 
வருகை பற்றியும்,
பெருவெற்றி பற்றியும்,
எதிர்வு கூறுகிறார்கள்..

இரைச்சலாய் கேட்ட வண்ணம்...
ஆங்காங்கே மனித மனங்களின்
இருண்ட மூலைகளில்
ஓர் எண்ணம் குடிகொள்ள...
ஆங்காங்கே இருண்டமூலைகளில்
மக்கள் சந்தித்துக் கொள்கிறார்கள்