அக்கரையில்

Sunday, September 30, 2012

என்றாவது ஓர் நாள்
என்னை நான் அக்கரையில் சந்திக்க துடிக்கிறேன்...

வார்த்தைகளின் நிஜமும்,
கனவுகளின் துடிப்பும்,
சுதந்திரத்தின் வனப்பும்,
வரையறையற்ற மிதப்பும் நிறைந்து
என்னை நான் அக்கரையில் சந்திக்க துடிக்கிறேன்

தீட்டிய வண்ணங்கள்
எழுமாற்று ஓவியங்களாய் கண்முன் தோன்றும்.
தோல்வியின் வலிகளும்,
காயங்களின் தடங்களும்,
வெற்றியின் படிகளென சொல்லி சிரிக்கும்...
என்னை நான் அக்கரையில் சந்திக்க துடிக்கிறேன்

எதிரிகளால் எழுந்த அவமானங்களும்
ஒருங்கே துரோகங்களும்
மார்பில் விழுந்த விழுப்புண்களென மார்தட்டிடும்
தெரிந்தே வீழ்ந்த தவறுகளும்
புரிந்தே நான் மனிதனான கதையை
என்னிடம் சொல்ல...
என்னை நான் அக்கரையில் சந்திக்க துடிக்கிறேன்

தூக்க தூக்கு

Sunday, September 9, 2012

சாவு வீட்டிற்கு ஊரே கூடியது,
கிடக்கிற உடலுக்கு பெயரில்லை
வெறும் கட்டைக்கு ஒரே பெயர்
'பிணம்'...
ஊர் கூடி வைத்த பெயரை
ஊரே நீக்கி
'பிண'ப்பெயரை வைத்தது,
"வீட்டில் வைத்திருக்க முடியாது,
தூக்கு தூக்கு"
என்று துரிதப்படுத்தி,
இடுகாட்டில் சாம்பலாக்கி
மாண்டவன்
நினைவுகளுக்கும் சேர்த்து
தலைமுழுகி மறந்து போனார்கள்...


(குறிப்பு - திருமந்திரத்திலிருந்து எழுதப்பட்டது)

பெயர்கள்

Thursday, August 30, 2012



எண்ணிப்பார்த்தால் அர்த்தமற்றுபோகும்
ஒலிகளின் சேர்க்கையாய் பெயர்கள்
வீட்டுக்கொன்;று
ஊருக்கொன்று
உள்ளொன்று 
புறமொன்று

பெயர்களால் இனங்காணப்படுகிறோம்,
பெயர்களால் சுட்டப்படுகிறோம்
பெயர்களாகவே வாழ்கிறோம்

அர்த்தமற்ற ஓலிகளின் சேர்க்கையில்
உருவாகி
நீயென்றும்  நாமென்றும்
உணர்வாலும் புணர்வாலும் 
உருவாகும் 'நான்'
நிலைபெறுமோ நித்தியமாய்

கற்பனை மீன்

Tuesday, June 19, 2012

விழி பல நாள் பூத்திருதிந்து
நாளும் களை அறியாது, அயராது தூண்டிலிட்டு
கற்பனை மீனொன்றை பிடித்தே
சந்தையில் ஏலமிட்டேன்;
பெரு விலை கொடுத்து
வாங்கி சென்றார் பெரும் செல்வந்தர்

சில நாள் கழித்து,
அவரையண்டி எப்படி  மீன்னென்றேன்
மிக்க ருசியென்று வழிநடந்தார்.

உனக்கும் எனக்குமிடையில்

Sunday, January 29, 2012

அங்கும் இங்குமாக நீயும் நானும்
அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகளில்.

நம்மில் யார் மறைந்துவரும் நினைவுகளையும்
குறைந்துவரும் பொழுதுகளையும் முதலில் காண்பவர்.
எஞ்சுவது சோகமாயினும் குறையில்லை...
இனியேனும் உண்மை துலங்கட்டும்

விடிந்திட்ட பொழுதுகளிலேனும் நான் கண்ட கனவுகள்
நிறைவேறக் கண்டாயா
நகராத கணங்களிலேனும் நானாக நான் வாழ்ந்திடக்
கணங்கள் கண்டாயா.

என் கண்ணாடிகளில்
விழும் நீயும், நானும் ஒன்றெனன்று...
பிறர் உரைப்பது பொய்யென்றாவது கண்டாயா?